aartatraana bhagavatpada ashtakam



श्रीः

॥ आर्तत्राणभगवत्पादाष्टकम् ॥

धर्मे संक्षुभितेऽध्वरेष्वपि हविर्भुक्षु क्षुधा विह्वले–

ष्वस्यानर्थकृतः प्रहाणमुपदिश्यावाहयिष्यन् नृणाम् ।

मुक्त्वा मौनमवातरत् करुणया शम्भुः स्वभावेन यः

आर्तत्राणपरायणः स भगवान् श्रीशङ्करो मे गतिः ॥ १ ॥

தர்மமும் யஜ்ஞங்களும் சீர்குலைந்து (அதனால்) அவியுண்பவர்களான (தேவர்கள்) பசியால் வாடியபோது (இதனால் மனிதர்களுக்கும்) கெடுதல் ஏற்படும் (என்பதால்) மக்களுக்கு (தத்துவம் தர்மம் பக்தி ஆகியவற்றை) உபதேசிப்பதன் மூலம் இதனை சரிசெய்வதற்காக, இயற்கையாகவே மங்களத்தின் இருப்பிடமான எந்த (ஶம்புவானவர்) மௌனத்தை விடுத்து (கல்லாலின் அடியிலிருந்து) அவதரித்தாரோ, அல்லலுற்றவர்களைக் காப்பதே விரதமாகக் கொண்ட அந்த ஶ்ரீ ஶங்கர பகவானே எனக்கு கதி.

दीर्घं कालमपत्यलाभरहितौ खिन्नान्तरौ दम्पती

एको नौ शरणं भवेत् शिव इति स्वं पादमूलं गतौ ।

दृष्ट्वा तन्मुदमावहन् निखिलवित् पुत्रः स्वयं जातवान्

आर्तत्राणपरायणो मम गुरुर् मेऽपि प्रदेयान्मुदम् ॥ २ ॥

வெகு நாள் ஸந்ததி கிட்டாமல் வருந்தி சிவன் ஒருவனே நமக்கு சரணம் என்று தன் திருவடியை அண்டி வந்த தம்பதியரைப் பார்த்து, அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க அனைத்தையும் அறிந்த (ஒரு மகனே போதும் என்ற வரத்தின்படி) தானே மகனாக (எவர்) பிறந்தாரோ, அல்லலுற்றவர்களைக் காப்பதே விரதமாகக் கொண்ட (அந்த) எனது குரு எனக்கும் மகிழ்ச்சியை அளிப்பாராக.

वृद्धां मातरमन्यबन्धुरहितां सन्तोषयन् सेवया

तत्स्नानाय समानयच्च सरितं सीरं कुठारं विना ।

लोकार्थे धृतसंयमोऽपि परमामन्ते गतिं प्रापयत्

आर्तत्राणपरायणः सुततमो मां मातृभक्तोऽवतु ॥ ३ ॥

பிற உறவினர் அற்ற வயதான தாயாரைப் பணிவிடையால் மகிழ்வித்து, அவரது ஸ்நானத்திற்காக (பலராமர் யமுனையை இழுத்தது போல்) உலக்கை இன்றி (பரசுராமர் ப்ரஹ்மபுத்ரரை ஓட வைத்தது போல்) கோடாலி இன்றி (பகவானை ப்ரார்த்தித்தே) நதியை (பாதை மாற்றி) கொண்டு வந்தார். உலகின் நலனுக்காக (தாயைத் தனியே விட்டு) துறவறம் மேற்கொண்டாலும் இறுதி (காலத்தில் வந்து கூட இருந்து) உயர்ந்த கதியை அடைவித்தார். அல்லலுற்றவர்களைக் காப்பதே விரதமாகக் கொண்டவரும் (இத்தகைய) சிறந்த மகனும் (மாத்ரு பஞ்சகத்தில் வெளிப்பட்ட) மாத்ரு பக்தியைக் கொண்டவருமான (அவர்) என்னைக் காப்பாராக.

कां चित् कां चन धात्रिकां प्रददतीमुष्णेन नेत्राम्बुना

मां चित्ते प्रणिधाय दुःखहतये शीतं कृपावारिणा ।

शान्तां काञ्चनधात्रिकाभिरभिवर्ष्याहर्षयत् क्लिन्नधीः

आर्तत्राणपरायणः स गुरुराण्मां चित् सुवर्णं क्रियात् ॥ ४ ॥

(வறுமையில் இருக்கும் தன்னிடம் பிக்ஷைக்கு அளிக்க இதை விட நல்லதாக எதுவும் இல்லையே என்ற வருத்தத்தினால்) சூடான கண்ணீருடன் (கூடியவளாய்) ஒரு (காய்ந்த) நெல்லிக்கனியை அளித்த ஒரு (அம்மாளை, அவளது) இன்னலைப் போக்குவதற்கு லக்ஷ்மியை மனதினால் த்யானித்து (அவளது) கருணையெனும் நீரால் குளிர்ந்ததாக தங்க நெல்லிக்கனிகள் சுற்றிலும் பொழிவித்து, (அவளது மனம்)‌ சாந்தப்பட்டதோடு (அல்லாமல்) மிகுந்த மகிழ்ச்சி அடையும்படி செய்தார். ஈர மனம் கொண்டவரும் அல்லலுற்றவர்களைக் காப்பதே விரதமாகக் கொண்டவருமான அந்த குருமார்களுக்கு அரசர் என்னையும் நல்ல‌ வர்ணம் (அழகு/வாக்கு/குணம்) கொண்டவனாக ஆக்கட்டும்.

मन्त्रैर्यो नृहरिं समर्च्य दृशि तं नप्राप्य भग्नाशयः

स्वं देहं बलये स्म याचति च यः कैतव्यभुग्नाशयः ।

श्रेष्ठं तापसमेकधोग्रचरणं चायोजयद् भाग्यतः

आर्तत्राणपरायणो मम गुरुर्यत्नस्य सिद्धिं क्रियात् ॥ ५ ॥

எந்த (ஸநந்தனர் என்னும் பத்மபாதர்) மந்த்ரங்களால் நரஸிம்ஹரை ஆராதித்து (ஆனால்) அவரது தரிசனம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்திருந்தாரோ, மேலும் எந்த (காபாலிக/பைரவ உபாஸகன் தன்னை அழிப்பதற்காக) களவினால் வக்கிரமான எண்ணத்துடன் தனது உடலை பலியிட யாசித்தானோ, (அந்த பத்மபாதரின் மீது நரஸிம்ஹ ஆவேசம் ஏற்பட்டு அந்த உபாஸகன் வதம் ஆனதால்) ஒரே சமயத்தில் சிறந்த தவசியான (ஒருவரையும்) உக்கிரமான நடத்தை கொண்ட (ஒருவனையும்) பாக்கியம் பெறும்படி செய்தார். அல்லலுற்றவர்களைக் காப்பதே விரதமாகக் கொண்டவரான (அந்த) எனது குரு எனக்கும் முயற்சி வெற்றியாகும்படியான (பாக்கியத்தை) அளிப்பாராக.

पाठे क्वेति परैरुपेक्षितमपि स्वल्पार्थबुद्ध्याऽन्वितम्

श्रद्धायुक्तमुपाह्वयत् प्रियगुरोः कैङ्कर्यमात्रोत्कटम् ।

सर्वश्लाघ्यपदाढ्यमेनमकरोत् सङ्कल्पतश्च क्षणात्

आर्तत्राणपरायणः शिशुतरं मामार्द्रदृष्ट्येक्षताम् ॥ ६ ॥

பொருள் அதிகமாக விளங்காததால் பிறரால் மதிக்கப்பெறாதவரும் சிரத்தையுடன் தனது பிரியமான குருவுக்கு தொண்டு செய்வதில் மட்டுமே ஆர்வம் கொண்டவருமான (கிரி என்ற சீடரை) பாடத்தின் போது எங்கே என்று அருகில் (வரும்படி) அழைத்தார். ஸங்கல்பத்தினாலேயே கணத்தில் அவரை அனைவரும் போற்றத்தக்க சொல்லாண்மை/ஸ்தானம் பெற்றவராக ஆக்கினார். அல்லலுற்றவர்களைக் காப்பதே விரதமாகக் கொண்டவரான (அவர், அதை விட ஒன்றுமறியாத) சின்னஞ்சிறுவனான என்னை ஈரப்பார்வையால் கடாக்ஷிப்பாராக.

सामान्यैरनवेततत्त्वमुचिते यः स्वान्तिकेऽस्थापयत्

शिष्येणापि सुगीतमात्मविभवं यो व्याचचक्षे महान् ।

पूर्वं कर्मठमन्यशङ्कितमपान्नैष्कर्म्यसिद्ध्या दृढम्

आर्तत्राणपरायणो गुरुवरः शिष्यं मकामुद्धरेत् ॥ ७ ॥

சாமானியர்களால் அறியவியலாத தன்மையைக் கொண்ட (ஸர்வஜ்ஞாத்மாவை) எவர் (தந்தையிடமிருந்து கேட்டு அவருக்குத்) தகுந்த தனது அருகாமையில் வைத்துக்கொண்டாரோ, (அதே போன்ற ஹஸ்தாமலகர் என்ற) சிஷ்யரால் பாடப்பெற்ற ஆத்மாவின் சிறப்பை (விளக்கும் நூல்) சீர்மிகுந்து (விளங்குவதால், அவர் தன்னைக் காட்டிலும் சிறியவருடையது என்றாலும், தான்) மஹான் (என்பதாலேயே அதற்கு) எவர் விளக்கவுரை இயற்றினாரோ, முன்பு கர்மானுஷ்டானங்களில் அதிகம் ஈடுபட்டிருந்ததால் பிறரால் (இவருக்கு அத்வைதத்தில் உண்மையில் எவ்வளவு பிடிப்பு உள்ளது என்று) சந்தேகிக்கப்பட்ட (ஸுரேஶ்வரரை, கர்மானுஷ்டானங்களுக்கு அப்பாற்பட்ட அத்வைதத்தை விளக்கும்) நைஷ்கர்ம்ய ஸித்தி (என்னும் நூலை இயற்றும்படி அருளி அவரது நற்பெயரை எவர்) காப்பாற்றினாரோ, அல்லலுற்றவர்களைக் காப்பதே விரதமாகக் கொண்டவரான (அந்த) சிறந்த குரு அல்பமான சிஷ்யனான என்னையும் தூக்கி விடுவாராக.

नास्तिक्यस्य विनाशमार्यचरितस्थैर्यं च धर्मोदयं

कल्याणावहमाश्रितैः प्रथयितुं योऽद्यापि सुश्राम्यति ।

सर्वज्ञो जगतां सदा हितकरः कारुण्यपूर्णान्तरः

आर्तत्राणपरायणो मम गुरुः काञ्चीनिवासोऽवतु ॥ ८ ॥

நாத்திகத்தை போக்கி, நல்லோர்களின் பாதை திடப்பட்டு, உலகிற்கு நன்மையை செய்யும் தர்மப் பெருக்கை (தன்னை)‌ நாடியவர்கள் மூலம் பரப்ப எவர் இன்றும் (தமது சிஷ்ய பரம்பரையினர் வடிவில்) மிகவும் மெனக்கிடுகிறாரோ, (இன்றும்) அனைத்தும் அறிந்தவரும் என்றும் உலகிற்கு நன்மை பயப்பவரும், கருணை நிரம்பிய மனத்தினரும், அல்லலுற்றவர்களைக் காப்பதே விரதமாகக் கொண்டவருமான காஞ்சியில் வசிக்கும் என் குரு (என்னைக்) காப்பாராக.

॥ इति श्रीकाञ्चीकामकोटिपीठाधीश्वरकृपापात्रेण सदाशिवब्रह्मेन्द्रसन्निधिवास्तव्येन श्रीरमणशर्मणा श्रीमदप्पय्यदीक्षितेन्द्रप्रणतिपूर्वकं विरचितम्
आर्तत्राणभगवत्पादाष्टकम् ॥