Parjanya Jaya Gitam



श्रीः

॥ पर्जन्य-जय-गीतम् ॥

பர்ஜந்ய (மழை) ஜய கீதம்

जय जय पर्जन्य – ईश्वर-`करुणा·मृत-जन्य ।

काले काले वर्ष निकामं`

सस्या¯न्यभिरामं – वर्धय` जन-योग-क्षेमम् ॥ १ ॥

மழையின் (தேவனே) உமக்கு ஜயம்! ஈசனின் கருணையாகிய அமுதத்திலிருந்து உதிப்பவரே! (மக்களுக்கு) த்ருப்தி ஏற்படும் அளவுக்கு உரிய காலங்களில் பொழிவீர்! செடிகளை அழகுற வளர்த்து மக்களின் யோக க்ஷேமத்தையும் வளர்ப்பீர்!

(இல்லாதது கிடைப்பது யோகம். கிடைத்தது நீடித்து இருப்பது க்ஷேமம்.)

अग्नि-होत्र-फलित – सहस्र-`किरण-गुणो·त्कलित ।

इन्द्र-प्रेरित मरु·दभिसारित`

पृथिवी¯मनु विसृत – स्वामिन्` वरुणा·लय-गामिन् ॥ २ ॥

அக்னியில் (செய்யப்படும்) ஹோமங்களின் பயனானவரே! ஆயிரம் கதிர்கள் (கொண்ட சூரியனின் அக்கதிர்களே ஆகிய) கயிறுகளால் (அல்லது வெம்மையாகிய அவற்றின் குணத்தால்) மேலே ஏற்றப்பட்டவரே! இந்திரனால் தூண்டப்பட்டு வாயுவின் (ஓட்டங்களால்) பரப்பப்பட்டு பூமியில் (விழுந்து) சுற்றிலும் படர்ந்து (இறுதியில்) வருணனின் இருப்பிடமான (கடலுக்கு) சென்றடைபவரே! ஐயனே! (உமக்கு ஜயம்!)

दिवस्¯पुत्र देव – सुदिवा` तमश्·छाद्य-धामन् ।

सप्तदशा·क्षर-साधित-जन्मन्`

चतू·रूप-धारिन् – अ·न्वृतु` वेला-द्वय-पातिन् ॥ ३ ॥

மேலுலக (தேவதையின்) மகனாரே! நண்பகலிலும் (அனைத்து) இடங்களையும் இருட்டால் மூடுபவரே! பதினேழு எழுத்துக்கள் (கொண்ட யாக மந்திரங்களைப் பயன்படுத்தி தேவர்களால்) பிறப்பிக்கப்பட்டவரே! (மேகம் மின்னல் இடி மழை ஆகிய) நான்கு வடிவம் தரிப்பவரே! பருவந்தோறும் (இரவு பகல் ஆகிய) இரு வேளைகளிலும் விழுபவரே! (உமக்கு ஜயம்!)

वर्षन् पुरतो मोद¯मावहन्` वर्षन् वात-निपातित-धारो`

वर्षन् स्तनित-विभीषित-बालो` वर्षन् स्फूर्जथु-विद्युद्-द्योतो`

वर्षन् नक्तं-प्लावित-देशो` वर्षन् श्लाघित-बहु-प्रदानो`

वर्षन् भानू·द्गमे विराजन्` अन्न-पानतो नन्दय निखिलान्`

शान्त-ताप-वसुधान् – कृत्वा` तृप्त-शीत-हृदयान् ॥ ४ ॥

முன்பு (வீசும் குளிர்ந்த காற்றால் மழை வரப்போகிறது என்ற) மகிழ்ச்சியை வருவித்து பொழிபவரே! (பலமான) காற்றால் தாரை (தாரையாக நீர்) கீழே விழும்படி பொழிபவரே! இடியால் சிறுவர்கள் பயப்படுப்படி (செய்து) பொழிபவரே! உறுமல் (போன்ற ஒலிகள்) கூடிய மின்னலால் ஒளிர்ந்து பொழிபவரே! இரவு (தொடர்ந்து பெய்வதால்) நிலம் (முழுதும்) முழுகும்படி பொழிபவரே! “(மழை) நிறக்க பெய்துள்ளது” (என்று மக்கள்) பாராட்டும்படி பொழிபவரே! (மேகங்கள் விலகிய பின்) சூரியன் வெளிவந்தபிறகு (பளிச் என்று) மின்னும்படி பொழிபவரே! பூமியின் தாபம் நீங்கி உண்ணவும் பருகவும் (கிடைக்கும்படி) மகிழ்வித்து அனைவரின் இதயமும் திருப்தி அடைந்து குளிரும்படி செய்வீர்!

भुवः सुभिक्षत्वे – कोशं` दिवश्¯च्यावय त्वम् ।

सरितः कुल्याः कूप-तडागाः`

परितः पूर्यन्तां – सुकृतः` प्रजाः प्रजायन्ताम् ॥ ५ ॥

பூமி ஸுபிக்ஷமாக (இருக்கும்பொருட்டு) ஆகாயத்தின் (நீர் அடங்கிய) கருவூலத்தை வீழ்விப்பீர்! நதிகள், வாய்க்கால்கள், கிணறுகள், ஏரிகள் (முதலிய நீர்நிலைகள்) எப்புறமும் நிறைந்து (செடிகள் முதல் மனிதர்கள் வரை) நன்மக்கள் பிறக்கட்டும்!

पयो-धरैर्¯भरित – धेनुर्¯`वत्स¯मिव ह्वयसे ।

“हरि-हर”-जप-पर-मण्डूक-गणै¯`

रहो·रात्र-सत्रे – संस्तुत` मयूरा·भिनृत्त ॥ ६ ॥

(பசியும் தாகமும் தீர்க்கும் பாலால் மடி கனத்த) தாய்ப்பசு கன்றை அழைப்பது போல் (பூமியில் உள்ள மக்களை உமது ஆதரவுடன்கூடிய) சப்தத்தால் அழைக்கிறீர். “ஹரி ஹர ஹரி ஹர” என்று (நீர் பொழிவதற்கு வேண்டி) ஜபம் செய்யும் தவளைக்கூட்டங்களால் இரவும் பகலும் (நில்லா) வேள்வியில் போற்றப்படுபவரே! மயில்களால் (தன் முன்) நடனமாடப் பெறுபவரே! (உமக்கு ஜயம்!)

कृष्ण-वर्ण कम्र – भगवद्-`वपु·रुपमा-धन्य ।

श्रोत्रिय-राज-स्त्री-परिपालित-`

वेद-नीति-चरिते – त्रितये` त्रि¯रायासि मासे ॥ ७ ॥

அழகிய கறுமை நிறத்தவரே! (திருமால் வடிவமாகிய) இறைவனின் உடலுக்கு (கார்மேகவண்ணன் முதலியவாறு) உவமையாகும் பாக்கியம் கொண்டவரே! “வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை, நீதி வழுவா நெறி மன்னர்க்கோர் மழை, மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை, மாதம் மும்முறை மழையெனப் பெய்யுமே” (என்ற ஆன்றோர் வாக்குப்படி) மாதம் (மும்மாரி என) மும்முறை வருபவர் நீர்.

अङ्कुरितं बीजम् – जातं` गवां सुप्रपाणम् ।

दुर्जन-कोपात् पर¯मतिवेगे`

सुजना दूयन्ते – शाम्य~` नमो मन्यवे ते ॥ ८ ॥

(மிகுதியான மழையை தவிர்க்கும்படி வேண்டுவது –)

(மழை பொழிந்ததால்) விதைகள் முளைத்துவிட்டன! பசுக்களுக்கும் (மற்ற பிராணிகளுக்கும்) நல்ல குடிநீர் ஏற்பட்டுவிட்டது. ஆனால் தீயோர்கள் மீதுள்ள கோபத்தால் (நீர்) மிகுதியான வேகத்துடன் (தொடர்ந்து பெய்தால்) நல்லோரும் அவதிப்படுகிறார்களே! சாந்தமடைவீராக! உமது கோபம் (ந்யாயமானது தான் ஆகையால்) அதற்கு வந்தனம்! (ஆனால் நல்லோருக்காக தீயோரையும் பொறுப்பீராக!)

(இதுவரை மழைத்தேவரை நன்கு பெய்ய வேண்டும் ஆனால் அதிகமாக பெய்ய வேண்டாம் என்றெல்லாம் வேண்டியாயிற்று. ஆனால் அதற்கு தகுந்த முறையில் மக்கள் தான் முதலில் நடந்துகொள்ள வேண்டும் என்பதால் இனி மக்களை நோக்கி பேசப்படுகிறது –)

जनता¯मम शृणुत – श्रुत्वा` मनसि निभालयत ।

यूय¯मेव खलु वृष्टिं कुरुथ~`

पुण्य-पाप-सारां – मधुराम्` अथवा क्लिष्ट-धराम् ॥ ९ ॥

மக்களே! என்னைக் கேட்பீர்! கேட்டு மனதில் பதியவைத்துக்-கொள்வீர்! மழை இனியதாக (அமைகிறதா) அல்லது பூமிக்கு இன்னல் (அளிப்பதாக அமைகிறதா என்பதை) நீங்கள் தான் தீர்மானிக்கிறீர்கள். (ஏனெனில் அது உங்கள்) புண்ய பாபங்களின் பலனானது.

समान¯मिद¯मुदकम् – ऊर्ध्वं` याति भवत्-कृतकम् ।

पुन¯रायाति च बहुतर-वृद्धं`

तेन भुवन¯मृद्धं – भूयान्¯`मा मनाग् विरुद्धम् ॥ १० ॥

(சாஸ்திரம் சொல்வது யாதெனில்) நீர் என்பது ஒன்றுதான். உங்கள் செயல்கள் மேலே (அவ்வுலகிற்கு நீர் வடிவமாகச்) செல்கின்றன. (அதுவே) பல மடங்கு பெருகி மீண்டும் (கீழே மழைவடிவமாக) வருகிறது. அதனால் உலகு ஸம்ருத்தி அடையட்டும். ஒருகாலும் மாறாக (நடக்க) வேண்டாம். (அப்படியென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக்கொள்ளுங்கள்!)

प्राणं जल-रूपम् – दयितं` कच्चित् पोषयथ ।

मल-विष-दूषण-रहिततया ऽवथ`

सर्व-देवतानाम् – आश्रय¯`मखिल-देह-जानाम् ॥ ११ ॥

உயிர் (மிகவும்) பிரியமானது! (அது இங்கு) நீர் வடிவமாக (உள்ளது). அதை (நீர்நிலைகளில் காப்பாற்றி குடிநீர்/உணவு முதலியவற்றுக்கும் விவசாயம் போன்றவற்றிலும் தார்மிகமான முறையில் தேவையான அளவு பயன்படுத்தி என்றிவ்வாறு சரியாக) பராமரிக்கிறீர்களா? அழுக்குகள், விஷங்கள் முதலிய மாசுகள் ஏற்படாமல் காப்பாற்றுகிறீர்களா? (இது) அனைத்து தேவதைகளின் இருப்பிடம் (மட்டுமின்றி) உடலில் பிறந்தவர்கள் அனைவருக்கும் புகலிடம் (ஆகுமே!)

सत्य¯मेव वदत – जननी-`जनकौ मानयत ।

गा¯रक्षत ता मा घ्नत मा घ्नत`

दया·र्द्र-हृदयाः स्त – जला·र्द्र-`पृथिवीं द्रष्टास्थ ॥ १२ ॥

(நீரைக் காப்பாற்றுவது மட்டுமின்றி தர்மத்தையும் காத்தால் தான் மழை பெய்யும் என்பது சாஸ்திரம்.) உண்மையையே பேசுங்கள்! தாய்தந்தையரை மதியுங்கள்! பசுக்களைக் காப்பாற்றுங்கள்! அவற்றைக் கொல்லாதீர்கள், கொல்லாதீர்கள்! கருணை என்னும் ஈரத்தை நெஞ்சில் கொண்டவராக இருங்கள்! (அவ்வாறெனில்) நிலத்தை(யும்) நீரினால் ஈரம் கொண்டதாக (தொடர்ந்து) பார்ப்பீர்கள்!

श्रेयः-पथ¯मेतम् – दैवी` वा¯गुपदिशति किल ।

“दाम्यत दत्त दयध्वं”-प्रतीक-`

“ददद”-रवा गगने – शरणी-`कार्या स्व·स्त्ययने ॥ १३ ॥

உயர்வுக்கு வழியாக (தர்மத்தைக் கடைபிடிப்பதாகிய) இதை தெய்வத்தின் குரலே (நமக்கு நேராக) உபதேசிக்கிறதே! (அதெப்படி என்றால் மழைகாலத்து மேகத்தின் சத்தம்) ஆகாயத்தில் த த த (என்பது போல்) கேட்கிறது. தமம் (புலனடக்கம்) தானம் தயை (ஆகிய இம்மூன்றையும் தான்) முதலெழுத்துக்களால் (கூறுகிறது. ஆகவே இதனையே) மங்களம் விரும்புபவர்கள் (வாழ்க்கையில் நல்ல வழி கிடைப்பதற்கு) அடைக்கலமாக ஏற்கவேண்டும்.

॥ इति श्री-काञ्ची-कामकोटि-पीठाधीश्वर-कृपा-पात्रेण

सदाशिव-ब्रह्मेन्द्र-सन्निधि-वास्तव्येन श्रीरमण-शर्मणा
विकारि-संवत्सर-वर्षऋतु-उपक्रमे विरचितं सुवर्ष-प्रार्थना-रूपं
पर्जन्य-जय-गीतम् ॥