ஶ்ரௌத கர்மாக்கள் - ஒரு அறிமுகம்



ஶ்ரௌத கர்மாக்கள் - ஒரு அறிமுகம்

வித்வான் ஶ்ரீரமணஶர்மா

காஞ்சீ ஶங்கர மடம், ஶ்ரீ ப்ரஹ்மேந்த்ராள் ஸந்நிதி

நெரூர் அக்ரஹாரம், கரூர் மாவட்டம்.

முகவுரை

வேதம் கர்ம காண்டம் ஞான காண்டம் என்று இரண்டு பாகங்கள் கொண்டது என்று நாம் அறிவோம். ஞான காண்டமானது பகவான்/கடவுள் என்று நாம் சொல்லும் பரம்பொருளைப் பற்றியும் அதனை அடைய வழியான ஞானத்தையும் சொல்லுகிறது. கர்ம காண்டமாவது அந்த ஞானம் அடைய நமக்குத் தேவையான பக்குவத்தைப் பெறுவதற்கு உதவுகிறது. மேலும் உலக வாழ்க்கையில் தேவையான நன்மைகளைப் பெறுவதற்கும் வழிகளாக யஜ்ஞங்களைச் சொல்லுகிறது.

வேதத்தில் உள்ள அக்னிஹோத்ரம், இஷ்டி முதலிய யஜ்ஞங்களைச் செய்ய இயலாதவர்களும் அதன் எளிமையான வடிவமான ஔபாஸனம், ஸ்தாலீபாகம் முதலியவற்றையாவது செய்ய வேண்டும் என்று மஹர்ஷிகள் க்ருஹ்ய ஸூத்ரத்தில் போதித்துள்ளனர். இவையும் யஜ்ஞங்களே. தற்சமயம் ச்ரௌதம் அதாவது ச்ருதி என்னும் வேதத்தாலேயே நேராக சொல்லப்பட்ட கர்மானுஷ்டானங்களைப் பற்றி – என்ன என்ன இருக்கின்றன, அவற்றின் பொதுவான பரிச்சயம் – இவற்றைப் பார்ப்போம்.

அக்ன்யாதானம்

இந்த யஜ்ஞங்கள் தேவதைகளைக் குறித்து அக்னியில் பல விதமான ஆஹுதிகளைக் கொடுப்பவையாக அமைகின்றன. அதற்குத் தேவை அக்னி. அக்னி என்றால் வெறும் நெருப்பு அல்ல. மந்த்ரங்கள் சொல்லி பலவித ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட்ட நெருப்பு வடிவத்தில் உள்ள தேவதா சக்தியே அக்னி எனப்படும். எப்படி கோவிலில் கல் விக்ரஹத்தில் உள்ள தேவதையோ அதுபோல்.

ஒருவனுக்கு விவாஹம் ஆகும்பொழுது மந்த்ரங்கள் சொல்லி எந்த அக்னியில் ஹோமம் செய்கிறானோ, எந்த அக்னி ஸாக்ஷியாக தர்ம பத்னியை கைப்பிடிக்கிறானோ, அந்த அக்னியே ஔபாஸனம், ஸ்தாலீபாகம் முதலிய பாக யஜ்ஞங்கள், மேலும் மற்ற சில ஸ்மார்த்த கர்மாக்களுக்கான அக்னி. அதனை வாழ்நாள் முழுவதும் அணையாமல் காப்பாற்ற வேண்டும். அந்த அக்னியிலிருந்து ஒரு பகுதியைப் பிரித்தே அதிலிருந்தே ச்ரௌத கர்மாக்களுக்கான அக்னியை உருவாக்க வேண்டும்.

அக்னி தேவனின் பல அம்சங்கள் பூமியில் பலவித கனப்பொருள்களிலும் மரங்களிலும் சென்று ஒடுங்கியிருப்பதாக வேதம் கூறுகிறது. ஆகவே அந்த அனைத்து அம்சங்களையும் சேர்த்து அந்த அக்னி தேவனை பூர்ணமாக நமது வீட்டிற்கு வரவழைக்க வேண்டும். ஔபாஸன அக்னியின் ஒரு பகுதியில் ப்ரஹ்மௌதனம் என்பதாக சாதம் வடித்து ஆதானம் செய்து வைப்பவர்களுக்கு போஜனம் செய்விக்க வேண்டும். மறுநாள் காலை அந்த அக்னியின் மீது புதிய அக்னி கடைவதற்கான அரணிக்கட்டைகளை சூடுபடும்படிக் காய்ச்ச வேண்டும். இப்பொழுது அக்னி தேவனின் சக்தியானது அரணிக்குள் ஏறுகிறது. அவரது அம்சங்களாக சேகரித்துள்ள பொருட்களை ஹோம குண்டங்களில் வைத்து அரணியைக் கடைந்து மீண்டும் நெருப்பு வடிவமாக அவரை உருவாக்கி அக்குண்டங்களில் வைக்க வேண்டும்.

ச்ரௌத அக்னியானவர் கார்ஹபத்யம், தக்ஷிணாக்னி, ஆஹவனீயம் என்று மூன்று வடிவமாக இருக்கிறார். ஆகவே ப்ரயோக காலத்தில் மூன்று குண்டங்களில் வைக்கப்படுகிறார். இதுவே ஆதானம் எனப்படும். இப்பொழுது ச்ரௌத அக்னி இந்த யஜமானனுக்கு கிடைத்ததாகிறது. ஆனால் இந்த மூன்று வடிவங்களில் கார்ஹபத்யத்தை மட்டுமே எப்பொழுதும் ஔபாஸனத்தைப் போல் அவசியம் காப்பாற்ற வேண்டும். அதிலிருந்து மற்ற இரு அக்னிகளையும் ப்ரயோக காலத்தில் மந்த்ரம் சொல்லிப் பிரித்துக்கொள்ளவேண்டும். சிலரோ மூன்று அக்னிகளையும் வைத்துக் காப்பர்.

அக்னிஹோத்ரம்

ஆதானம் செய்தது முதல் தினமும் மாலையிலும் காலையிலும் அக்னிஹோத்ரம் செய்யவேண்டும். மந்த்ரம் சொல்லிப் பால் கறந்து, கார்ஹபத்யத்திலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து, அதில் பாலைக் காய்ச்சி பிறகு மந்த்ரம் சொல்லி, அதிலிருந்து ஒரு பாகத்தை ஹோமக்கரண்டியில் சிறிய கரண்டியால் எடுத்துக்கொண்டு, ஆஹவனீயத்திற்குச் சென்று ஹோமம் செய்யவேண்டும். பிறகு கார்ஹபத்ய தக்ஷிணாக்னிகளிலும் ஹோமம் உண்டு.

அக்னிஹோத்ரத்தை யஜமானனே செய்வது சிறந்தது. அல்லது புத்ரன் முதலிய ஒருவன் அத்வர்யு எனப்படும் ருத்விக்காக இருந்து யஜமானனுக்காக செய்யலாம்.

அக்னிஹோத்ரத்திற்கு பாலே முக்கிய ஹவிஸ். பால் இல்லாவிடில் அரிசியையும் ஹவிஸ்ஸாக பயன்படுத்துவர். ஹோமம் செய்யப்படுவது ஹவிஸ் எனப்படும். ஸோம யாகத்தில் உள்ள ஸோம ரஸமானாலும் அதுவே பெயர்.

அக்னிஹோத்ரமே யஜ்ஞங்களுக்கு ஆதாரம், அனைத்து தேவதைகளும் பித்ருக்களும் கூட அக்னிஹோத்ரத்தில் பங்கு பெற ஆசைப்படுகின்றனர் என்றெல்லாம் பலவாறாக வேதம் அக்னிஹோத்ரத்தைப் புகழ்கிறது. ஆகவே தான் அக்னிஹோத்ரம் செய்பவர்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்கிறோம்.

அக்னிஹோத்ரிகளின் ப்ரயாண கட்டுப்பாடுகள்

அக்னியை ஸம்ரக்ஷணம் செய்யும் யஜமானனோ பத்னியோ ஸ்வதந்த்ரமாக ப்ரயாணம் செய்ய முடியாது. அதிலும் ஒரு தாயார் குழந்தையை விட்டுப்போக முடியாதது போல் பத்னியிடம் தான் அக்னி இருக்கவேண்டும். பத்னி இல்லாதவனுக்கு யஜ்ஞம் இல்லை என்று வேதம் பலமுறை கூறுகிறது. பத்னிக்கு மந்த்ர காரியங்கள் அதிகம் இல்லாவிடினும் அவள் அருகில் இருந்தால் தான் யஜ்ஞம் செய்ய யஜமானனுக்கு அதிகாரம்.

யஜமானன் வேண்டுமானால் உலக வாழ்க்கைக்காக வருமானம் ஈட்ட வெளியூர் செல்லலாம். சென்றாலும் ப்ரவாஸ உபஸ்தானம் என்பதாக சில மந்த்ரங்கள் சொல்லி அக்னியிடம் அனுமதி பெற்றுச் சென்று திரும்பி வந்தும் உபஸ்தானம் செய்யவேண்டும்.

பத்னியுடன் ப்ரயாணம் செய்வதானால் அல்லது வீட்டிலேயே அக்னியை இடம் மாற்றுவதானாலும் அக்னி தேவனை அரணியிலோ அல்லது தன் சரீரத்திலோ மந்த்ரம் சொல்லி ஸமாரோபணம் (ஆவாஹனம்) செய்துகொண்டு சென்று அடுத்த ஹோமம் செய்யவேண்டிய நேரத்தில் மந்த்ரத்தால் உபாவரோஹணம் (இறக்கி வைத்து) செய்யவேண்டும். இதிலும் பல கட்டுப்பாடுகள் உண்டு.

தர்ச பூர்ணமாஸ இஷ்டி

ஒரு நாளுக்கு உதய அஸ்தமன வேளைகள் ஸந்திகளாவது போல் மாதத்திற்கு பூர்ணமாஸம் என்னும் பௌர்ணமியும் தர்சம் என்னும் அமாவாஸ்யையும் பர்வாக்களாக அதாவது ஸந்திகளாக உள்ளன. ஆகவே அச்சமயத்தில் இஷ்டி என்பதான யஜ்ஞத்தைச் செய்யவேண்டும்.

பர்வ காலத்தில் இஷ்டிக்கு ஸங்கல்பம் செய்து, வேண்டிய பர்ஹிஸ் அதாவது தர்பை, மற்றும் இத்மம் அதாவது ஸமித்துகளை மந்த்ரம் சொல்லி அறுத்து அல்லது வெட்டிக்கொண்டு வரவேண்டும். நாளை இவன் நமக்கு ஆஹாரம் அளிப்பான் என்று அன்றைய தினம் தேவதைகளும் உபவாஸம் இருப்பார்களாம். ஆகவே தம்பதிகள் ப்ரஹ்மசர்ய வ்ரதத்துடன் அன்றிரவு உபவாஸம் இருக்க வேண்டும்.

தர்ச இஷ்டியில் தயிரும் பாலும் இந்த்ரனுக்கு ஹவிஸ். அமாவாஸ்யை அன்று மாலை பால் கறந்து காய்ச்சி மந்த்ரவத்தாக உறைக்கு ஊற்றி வைக்க வேண்டும். மறுநாள் காலை பால் கறந்து காய்ச்சி தனியாக ஹவிஸ்ஸாக பயன்படுத்தவேண்டும்.

இன்ன தேவதைகளுக்காக எடுக்கிறேன் என்று சொல்லி நெல்லை எடுத்துவைத்து, அதை உரலில் இட்டு இடித்து உமியைப் பிரித்து, அரிசியை அம்மியில் வைத்து அரைத்து, ஆஹவனீயத்தில் வாணலி இட்டு அதில் வறுத்து, நீர் விட்டு கிளறி, இறக்கி வைத்து, உருண்டையாக பிடித்து வைத்தால் புரோடாசம் எனப்படும். இதனை மேலும் கபாலம் எனப்படும் சிறிய செங்கற்கள் மேல் வைத்து, அதன் மேலும் சுற்றிலும் தணல் வைத்து, தோல் போல் ஏற்படும்படிச் செய்யவேண்டும். பிறகு இறக்கி வைத்து, அதிலிருந்து ஒரு பகுதியை எடுத்து ஹோமம் செய்யப்படும்.

இஷ்டிக்கு நான்கு ருத்விக்குகள் - அத்வர்யு, ஹோதா, ப்ரஹ்மா, அக்னீத் என்பதாக. அத்வர்யுவே ப்ரதானமான அனைத்து காரியங்களையும் செய்பவர். அக்னீத் அவருக்கு உதவியாளர். ஹோதா தேவதைகளை மந்த்ரம் சொல்லி அழைத்து ஹவிஸ்ஸை ஏற்கும்படி வேண்டுபவர். ப்ரஹ்மா மேற்பார்வையாளர்.

அத்வர்யுவானவர் புரோடாசம் முதலிய ஹவிஸ்ஸின் ஒரு பகுதியை எடுத்து வைத்துக்கொண்டு ஹோதாவிடம் “ஹவிஸ்ஸை ஏற்க இன்ன தேவதையை கூப்பிடு” என்று சொல்வார். பிறகு ஹோதா மந்த்ரம் சொன்னவுடன் அத்வர்யு ஆஹவநீயத்தருகே சென்று அக்னீத்திடம் “தேவர்களுக்கு ஹவிஸ் ஸித்தமாக உள்ளது என்று சொல்” என்பார். அவரும் “அப்படியே சொன்னேன்” என்று பதிலளிப்பார். பிறகு அத்வர்யு ஹோதாவிடம் “தேவதைக்கு ஹவிஸ்ஸை அளிப்பதற்கான மந்த்ரத்தைச் சொல்” என்பார். ஹோதாவும் “சொல்கிறோம்” என்று கூறி மந்த்ரத்தைச் சொல்லி “கொடுக்கப்பட்டது” என்று முடிப்பார். அச்சமயம் அத்வர்யு ஹவிஸ்ஸை ஆஹவநீயத்தில் இடுவார். இதுவே யஜ்ஞத்தின் ப்ரதான யாகம் எனப்படும்.

ஒவ்வொரு இஷ்டிக்கும் ப்ரதான யாக தேவதைகள் மாறுபடும். தர்சம் பூர்ணமாஸம் இரண்டிலும் அக்னியே முக்கிய தேவதை. பூர்ணமாஸத்தில் விஷ்ணு மற்றும் அக்னீஷோமர்களும் தர்சத்தில் இந்த்ரனும் அதிகமான தேவதை.

மற்றபடி ப்ரயாஜம் ஆஜ்யபாகம் அநூயாஜம் பத்நீஸம்யாஜம் போன்ற சில ஆஹுதிகளும் இஷ்டியில் அங்க (உறுப்பு) யாகங்களாக உள்ளன.

அமாவாஸ்யையன்று தர்ச இஷ்டியின் இடையே பித்ருக்களுக்கு பிண்ட பித்ரு யஜ்ஞம் என்பதாக தக்ஷிணாக்னியில் சாதம் வடித்து ஹோமம் செய்யப்படும்.

ஒவ்வொரு இஷ்டிக்கும் சாதம் முதல் ஸ்வர்ணம் வரை பலவிதமான தக்ஷிணைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தக்ஷிணை அளித்தால்தான் யஜ்ஞம் பலன் கொடுக்கும்.

ஆக்ரயண இஷ்டி

இயற்கை தேவர்களால் இயக்கப்படுகிறது. ப்ரஹ்மா ஸ்ருஷ்டியின் தொடக்கத்தில் தேவர்களையும் மனிதர்களையும் ஸ்ருஷ்டி செய்து தேவர்களை யஜ்ஞத்தின் மூலம் நீங்கள் த்ருப்திபடுத்துங்கள், அவர்கள் உங்களுக்கு இயற்கை வளங்களை அளித்து உபகாரம் செய்வார்கள் என்று ஏற்பாடு செய்துள்ளார். இவ்வுலகிலிருந்து தான் அவ்வுலகுக்கு உணவு, அவ்வுலகிலிருந்து தான் இவ்வுலகுக்கு - என்று வேதமே சொல்கிறது. அப்படி தேவர்களிடமிருந்து அனைத்தையும் பெற்றுக்கொண்டு ஆனால் நாம் யஜ்ஞம் செய்யவில்லை என்றால் தேவர்களுக்குக் கோபம் ஏற்படுகிறது. அதுவே இயற்கைச் சீற்றமாக வெளிப்படுகிறது. ஆகவே ச்ரௌத யஜ்ஞங்களைச் செய்ய இயலாவிடினும் ஸ்மார்த்த யஜ்ஞங்களையாவது செய்யவேண்டும். அதுவும் இயலாவிடில் ஸகல தேவதைகளுக்கும் மூலமான பகவானுக்கு வீட்டிலும் கோவிலிலும் பூஜையாவது செய்து நைவேத்யம் செய்யவேண்டும் என்று முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த முறையில் வருடாந்தரம் சரத் காலத்தில் புதிய அறுவடையாகி வரும் நெல்லை ஆக்ரயணம் என்ற இஷ்டியால் குறிப்பிட்ட தேவதைகளுக்கு ஸமர்ப்பணம் செய்யவேண்டும். அதை ஒட்டியே ஸ்மார்த்தத்தில் ஆக்ரயண ஸ்தாலீபாகமும் பூஜா பத்ததியில் அன்னாபிஷேகமும் ஏற்பட்டுள்ளன.

சாதுர்மாஸ்ய இஷ்டிகள்

தர்ச பூர்ணமாஸம் மற்றும் ஆக்ரயணம் தவிர சாதுர்மாஸ்ய இஷ்டிகள் என்பவையும் வருடாந்தரம் செய்யவேண்டியவை. தேவ சக்திகளை வலுப்படுத்தி அஸுர சக்திகளை ஜயிப்பது இவற்றின் முக்கியமான நோக்கம். சித்திரை மாதம் தொடங்கி வருடம் முழுதும் வைச்வதேவம், வருணப்ரகாஸம், ஸாகமேதம், ஶுநாஸீரீயம் என்று பெயர் கொண்ட பகுதிகளாக ஒவ்வொன்றுக்கும் நான்கு மாதங்கள் இடைவெளி விட்டு இஷ்டிகள் செய்யப்படுகின்றன.

காம்ய இஷ்டிகள்

மேற்கூறிய இஷ்டிகள் நித்யம் எனப்படுபவை. அவற்றுக்கு பல வித பலன்கள் இருந்தாலும் பலனை விரும்பினாலும் விரும்பாவிடினும் அக்னிஹோத்ரியால் அவசியம் செய்யப்பட-வேண்டியவை. வேறு பலன் கருதாது பகவானுக்கு அர்ப்பணமாக அவற்றைச் செய்தால் பாபங்கள் விலகும், அதன் மூலம் வாழ்க்கை ஸௌக்யமாகும், முன்பு கூறியபடி இயற்கைச் சீற்றங்கள் இன்றி காலத்தில் மழை பொழிந்து நாடு ஸுபிக்ஷமாக இருக்கும்.

ஆனால் குறிப்பிட்ட பலனை விரும்பினால் மட்டும் செய்வதற்கான பல இஷ்டிகள் உண்டு. அவை காம்யம் எனப்படும். தசரதர் புத்ரகாமேஷ்டி செய்து பயனடைந்தார் என்பது ப்ரஸித்தம். மேலும் மழைக்காக (தனிப்பட்ட பலனாக), சத்ருக்களை அழிக்க, வியாதிகளைப் போக்க என்று பலவிதமான காம்ய இஷ்டிகள் உண்டு.

பசுபந்தம்

ஹவிஸ் என்றால் எப்படி பொதுவாக ஹோமம் செய்யப்படுவது என்று பொருளோ அப்படி வேதத்தில் பசு என்றால் பொதுவாக நான்கு கால் ப்ராணி என்று பொருள், மாடு என்று பொருளல்ல. பெரும்பாலும் பசு என்று யஜ்ஞங்களில் சொல்லப்படுவது ஆடு தான். அதனை யூபம் என்னும் கழியில் கட்டி பிறகு சமிதா எனப்படும் வேதம் ஓதாத வர்ணத்தவர் ஒருவர் மூலம் ப்ராணனைப் பிரித்து பிறகு அதிலிருந்து வபை முதலிய குறிப்பிட்ட அங்கங்களை மட்டும் எடுத்து ஹோமம் செய்வது பசுபந்தம் எனப்படும்.

நமக்கு இன்று மாம்ஸம் உண்பதைத் தவிர்ப்பது பெரிய தர்மம் என்று வைத்திருக்கும்பொழுது வேதத்தில் பசுபந்தம் என்ற யஜ்ஞங்கள் சொல்லப்பட்டதைக் குறித்து பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. ஆனால் மோக்ஷத்தைக் குறித்த விசாரம் செய்யும் வேதாந்தத்திலேயே வ்யாஸாசார்யாள் பசுபந்தங்களை அசுத்தமல்லவா என்று கேட்டு இல்லை என்று தீர்ப்பளித்துள்ளார். அப்பைய தீக்ஷிதர் தமது யாகத்தில் அந்த ஜீவன் உத்தம லோகத்திற்குச் சென்றதைப் பார்த்ததாக சரித்ரம் உள்ளது.

இவ்விஷயத்தைப் புரிந்து ஜீர்ணித்துக் கொள்வது கடினமாகத் தான் உள்ளது. இருப்பினும் வியாதிஸ்தனுக்கு மருந்து பிடித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ஆனால் அவனுக்கு அவை நல்லது செய்யும் என்பதுபோல் தர்மமானது நமது மனதுக்கு பிடித்திருக்கவேண்டியதில்லை, ஆனால் நல்லது செய்யும். உதாரணமாக மஹான்கள் உண்ட இலையில் விழுந்து புரண்டால் உடலிலுள்ள பல பாபங்கள் போகும். மற்ற விஷயத்தில் எச்சில் என்று சொல்லப்பட்டதையே இந்த விஷயத்தில் மிகவும் பவித்ரமானது என்கிறது சாஸ்த்ரம். அது போல் தான் இதுவும். பூமியில் யஜ்ஞத்திற்காக ஒரு பள்ளம் தோண்டுவதைக்கூட க்ரூரமாயிற்றே என்று அனுதாபப்பட்ட வேதமே பசுபந்தத்தைச் சொல்லியிருக்கிறது என்றால் வேதத்தின் பெயரில் ச்ரத்தா புத்தியுடன் செய்யத்தான் வேண்டும். அத்தகைய ச்ரத்தை வரவில்லையானால் தூஷிக்காமல் ஒதுங்கியிருப்பது நலம்.

வருடாந்தரம் ஒரு பசுபந்தத்தையும் வாழ்நாளில் ஒருமுறையாவது கௌகில ஸௌத்ராமணி என்று மூன்று பசுக்கள் (ஆடுகள்) கொண்ட யாகத்தையும் செய்யச் சொல்கிறது சாஸ்த்ரம். இவை நித்யம். இவற்றைச் செய்வதில் தோஷம் கிடையாது, புண்யமே உண்டு. ஆனால் காம்ய இஷ்டிகள் போல் காம்ய பசுபந்தங்களும் உள்ளன. அவற்றையோ உனது ஆசை நிறைவேற ஒரு ஜீவனைக் கொல்வாயா என்று புராணங்களிலேயே மிகவும் நிந்தித்திருக்கிறது.

ஸோம யாகம் - தொடக்கம்

இஷ்டிகள் பசுபந்தங்களுக்கு மேல் உள்ளது ஸோம யாகம். இதையே பல விதமாகவோ அல்லது பல நாட்களோ செய்ய வேதம் சொல்லிக்கொடுக்கிறதே தவிர இதற்கு மேற்பட்ட யஜ்ஞ முறை கிடையாது. வருடா வருடம் ஸோம யாகத்தைச் செய் என்கிறது சாஸ்த்ரம். ஸோம யாகத்தையும் மிகவும் புகழ்கிறது வேதம். தேவர்களுக்கு மிக ப்ரியமான ஹவிஸ்ஸாக சொல்லப்படுகிறது ஸோம ரஸம். ஆகவே அதனை ஹோமம் செய்வதனால் அவர்கள் மிகவும் மகிழ்கிறார்கள். தேவர்கள் பகவானின் அம்சங்களே. ஆகவே இதுவும் யஜ்ஞேச்வரனான பகவானின் மிகச்சிறப்பான ஒரு வழிபாடே.

ஸோம யாகம் செய்ய குறைந்தது ஐந்து நாட்கள் வேண்டும். ஸுத்யை என்று பின்பு விளக்கப்படும் முக்கியமான தினம் பௌர்ணமியாகவோ அமாவாஸ்யையாகவோ இருக்கும்படி தொடங்குவர். அதற்கும் முன்பே யாகம் நடத்திவைக்க அத்வர்யு முதலிய பதினாறு பேர் ருத்விக்குகளை வேண்டி அவர்கள் வந்தவுடன் வரவேற்று உபசரிப்பர்.

யாகத்தின் முதல் நாள் வீட்டில் ஸங்கல்பம் செய்து யாகசாலைக்கு அக்னியை ஸமாரோபண முறையில் எடுத்துச் செல்வர். பிறகு தீக்ஷை என்பதை மேற்கொள்ள தீக்ஷணீய இஷ்டி என்ற ஒன்றைச் செய்து வபனம், ஸ்நானம், போஜனம் முதலியவற்றை முடித்துக் கொண்டு, மான்தோல், தண்டம் முதலியவற்றை ஏற்க வேண்டும். இதற்குப் பிறகு யாகம் முடியும்வரை யஜமான தம்பதிகளுக்கு சாதாரண உணவு கிடையாது.

இரண்டாம் நாள் காலை ப்ராயணீய இஷ்டி என்ற ஒன்றைச் செய்து ஸோம லதையை வாங்க வேண்டும். அதற்கு பசுமாடு, தங்கம் முதலிய பத்து பொருட்களைக் கொடுப்பர். அவ்வளவு உயர்ந்தது ஸோம லதை. அதனை ஒரு மாட்டு வண்டியில் வைத்து எடுத்துவருவர். வந்த ஸோம லதையை ஸோம ராஜா என்றே சொல்வர். அவருக்கு வரவேற்பாக ஆதித்ய இஷ்டி என்ற ஒன்றைச் செய்து அவருக்கான ஆஸனத்தில் வைப்பர்.

ஸோம யாகம் - ப்ரவர்க்யம் முதலிய

இரண்டாவது முதல் நான்காவது நாள் வரை நாளுக்கு இரு முறை ப்ரவர்க்யம் மற்றும் அதன்பிறகு உபஸத் இஷ்டி என்ற அனுஷ்டானங்கள் உண்டு.

ப்ரவர்க்யம் என்பது யஜ்ஞத்திற்குத் தலை போல முக்கியமானது என்கிறது வேதம். கார்ஹபத்யத்திலிருந்து அக்னியை வடக்குபுறம் எடுத்துவைத்து அதன்மீது ஒரு மண் பாத்ரத்தில் நெய்யை விட்டு கொதிக்கவைப்பர். இச்சமயம் ஒரு மாடு மற்றும் ஆட்டின் பாலைக் கறந்து அந்த கொதிக்கும் நெய்யில் விட வேண்டும். அச்சமயம் ஆவி பெரியதாக உருவாகும். பிறகு அந்த பால் கலந்த நெய்யை ஹோமம் செய்யவேண்டும். இதுவே ப்ரவர்க்யம் எனப்படும். அடுத்து உபஸத் என்ற சிறிய இஷ்டி உண்டு.

இதற்குப் பிறகு ஸுப்ரஹ்மண்யா ஆஹ்வானம் என்பதாக ஸாம கானம் ஒன்று. இந்த்ரனை ஸுப்ரஹ்மண்யா, அதாவது வேதத்திற்கு யஜ்ஞத்திற்கு மிகவும் ஹிதமான தேவதை என்று அழைத்து “உமக்கு இனி இத்தனை நாட்களில் ஸோம ரஸம் கொடுக்கப்படும், வந்து பெற்றுக்கொள்ளவும்” என்று முன்பே தெரிவிப்பது. மிக முக்கியஸ்தர்களை முன்பாகவே அழைக்கவேண்டும் அல்லவா!

இதே போல் அன்று மாலையும் ப்ரவர்க்யம், உபஸத், ஸுப்ரஹ்மண்யா உண்டு.

மூன்றாம் நாளும் இதே போல் இருவேளையும் உண்டு. இதற்கிடையே ஸோம யாகம் செய்வதற்கான மஹாவேதி எனப்படும் யாகசாலையின் பகுதியையும் உத்தரவேதி எனப்படும் ஹோம மேடையையும் நிர்மாணிப்பது.

நான்காம் நாள் காலை மாலை இரு வேளைகளுக்கான ப்ரவர்க்யம் முதலியவற்றை காலையிலேயே செய்து ப்ரவர்க்யத்துக்குப் பயன்படுத்திய பாத்ரங்களை உத்தரவேதியில் வைத்துவிடுவர். அடுத்து அக்னீஷோமீய பசுபந்தம். இச்சமயம் ஆஹவனீயத்திலிருந்து உத்தரவேதிக்கு அக்னியையும் வண்டியில் வைத்து ஸோம ராஜாவையும் கூடவே எடுத்துச் செல்வர். உத்தரவேதிக்கு மேற்கே வண்டியைச் சுற்றிலும் மண்டபம் கட்டப்படும். மறுநாள் ஸோம ரஸத்தைப் பிழிவதற்காக வஸதீவரீ என்னும் சுத்தமான ஜலத்தை எடுத்துவந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

ஸோம யாகம் - ப்ரதான நாள்

முக்கியமான ஐந்தாம் நாள் பொழுது விடியும் முன்பு பின்னிரவிலேயே ப்ரயோகம் தொடக்கம். இந்த நாளுக்கு ஸுத்யை என்று பெயர். ஸுத்யை என்றால் ஸோம ரஸத்தைப் பிழிவது. ஸுத்யையன்று காலை மதியம் மாலை என்று ஸவனங்கள் எனப்படும் மூன்று வேளைகளில் தனித்தனியே நசுக்கி பிழிய வேண்டும். ஸோம லதையை இரண்டாக பிரித்து அதிகமான பகுதியை காலையிலும் எஞ்சிய பகுதியை மதியமும் பயன்படுத்துவர். இதன் சக்கைக்கு தயிர் சேர்ந்து மாலையில் பயன்படுத்துவர். பிழிந்த ஸோம ரஸத்தை இந்த்ரன் முதலிய வெவ்வேறு தேவதைகளுக்கு அளிக்க மரத்தினாலான உரல் போன்ற பாத்ரங்கள் க்ரஹங்கள் எனப்படும்.

மூன்று ஸவனங்களிலும் பொதுவாக ஸ்தோத்ரம் எனப்படும் ஸாம கானம், அதை ஒட்டி ருக்வேத மந்த்ரங்களால் தேவதைகளைப் போற்றும் சஸ்த்ரம், அதை ஒட்டி க்ரஹங்களில் உள்ள ரஸத்தை ஹோமம் செய்வது என்பது உண்டு.

ஒவ்வொரு ஸவனத்திலும் முதல் ஸ்தோத்ரம் பவமானம் எனப்படும். கேட்பதால் பாபத்தைப் போக்கும். அது ஆனவுடன் ஸவநீய ஹவிஸ் எனப்படும் புரோடாசம் முதலியதான ஐந்து பொருட்களின் ஹோமம். பிறகு பல வித க்ரஹங்களின் ஹோமம். சமஸம் எனப்படும் சிறிய மரக்கிண்ணங்களாலும் ஹோமம் உண்டு.

ஸோம யாகம் - ஏழு ஸம்ஸ்தைகள்

காலை ஸவனத்தில் ஐந்து ஸ்தோத்ரம். மதியம் ஐந்து. மாலை இரண்டு. மொத்தம் பன்னிரண்டு. இறுதி ஸ்தோத்ரம் அக்னிஷ்டோமம் எனப்படும். அல்லது இதனுடன் மூன்று உக்த்ய ஸ்தோத்ரங்களைச் சேர்க்கலாம். அல்லது அதற்குப் பிறகு ஷோடசி ஸ்தோத்ரம் என்பதைச் சேர்க்கலாம். எந்த ஸ்தோத்ரத்தில் முடிகிறதோ அதற்கு ஸம்ஸ்தை என்று பெயர். யாகத்திற்கும் அதே பெயர்.

உக்த்யங்கள் இல்லாமல் ஷோடசி மட்டும் சேர்த்தால் அதி-அக்னிஷ்டோமம். ஷோடசிக்குப் பிறகு வாஜபேய ஸ்தோத்ரம் என்பதைச் சேர்த்தால் வாஜபேய யாகம். இதில் மட்டும் இன்னும் பல சிறப்பம்சங்களும் உண்டு.

ஷோடசியை மாலை ஸூர்ய அஸ்தமன வேளையில் செய்யவேண்டும். அதற்குப் பிறகும் இரவு முழுதும் மூன்றாக பிரித்து ஒவ்வொன்றிலும் நான்கு ஸ்தோத்ரங்கள் செய்து மறுநாள் காலை உதய நேரத்தில் ஸந்தி ஸ்தோத்ரம் என்று செய்தால் அதிராத்ரம் என்று யஜ்ஞத்திற்குப் பெயர். இதற்கு மேலும் நான்கு ஸ்தோத்ரங்கள் செய்தால் அப்தோர்யாமம் என்று பெயர். இப்படியாக ஒரு ஸுத்யையில் ஏழு ஸம்ஸ்தைகள் செய்யலாம். இவையே நித்ய ஸோம யாகங்கள். ஒரு ஸுத்யை என்பதால் ஏகாஹம் எனப்படும். காம்யமான ஏகாஹங்களும் உண்டு.

ஸோம யாகம் - பூர்த்தி

ஸுத்யை அன்று மற்றொரு பசுபந்தமும் கலந்து செய்யவேண்டும். ஸம்ஸ்தை ஆனபிறகு நீர்நிலைக்குச் சென்று வருணனுக்கு அவப்ருதம் எனப்படும் இஷ்டியைச் செய்து ஸோமத்திற்கு பயன்பட்ட பாத்ரங்களை நீரில் விஸர்ஜனம் செய்வர். தீக்ஷைக்குப் பிறகு இன்று தான் யஜமான தம்பதிகளுக்கு ஸ்நானம்.

இதற்குப் பிறகு இரண்டாம் நாள் செய்த ப்ராயணீயம் போல் உதயனீயம் என்று ஒரு இஷ்டி. அடுத்தது அனுபந்த்யம் என்று மற்றொரு இஷ்டி. பிறகு அக்னியை மீண்டும் ஸமாரோபண முறையில் வீட்டிற்குக் கொண்டுவந்து அங்கு உதவஸாநீயம் என்ற ஒரு இஷ்டியைச் செய்து அப்பொழுது இரவானாலும் மாலை செய்யவேண்டிய அக்னிஹோத்ரத்தைச் செய்யவேண்டும். இப்படி ஸோம யாகம் பூர்த்தி.

அஹீனங்கள் மற்றும் ஸத்ரங்கள்

ஒன்றுக்கும் மேற்பட்ட ஸுத்யைகளை ஒரே யஜ்ஞத்தில் செய்யலாம். இரண்டு முதல் பன்னிரண்டு ஸுத்யைகள் வரை செய்தால் அஹீனம். இது ஒரே யஜமானன் செய்வது.

இதற்கு மேல் செய்வது ஸத்ரம். பதினேழு அக்னிஹோத்ரிகள் சேர்ந்து தமது அக்னிகளை ஒன்றாகக் கலந்து செய்வது. அனைவரும் யஜமானர்களே. பதினாறு ருத்விக்குகளாகவும் யஜமானனின் தனிப்பட்ட காரியங்களுக்கு க்ருஹபதி என்ற பெயருடன் ஒருவருமாகச் செய்வர். பன்னிரண்டு நாட்களிலிருந்து தொடங்கி பல வருடங்கள் செய்யும் ஸத்ரங்கள் வரை உண்டு.

அஹீனங்கள் மற்றும் ஸத்ரங்கள் பலவித பலன்களுக்கு சொல்லப்பட்டுள்ளன. அனைத்தும் காம்யமே.

சயனம்

பசுபந்தம் மற்றும் ஸோம யாகங்களில் உத்தரவேதி எனப்படும் மண்மேடையில் தான் ப்ரதான ஹோமங்கள். சுக்கான்கல்களைப் பரப்பியும் மேடை உருவாக்கலாம். க்ஷுத்ர சயனம் எனப்படும். ஸோம யாகத்தில் செங்கல் அடுக்கியும் செய்யலாம். அது மஹாக்னி சயனம் எனப்படும். எப்படியானாலும் ஒவ்வொரு கல்லுக்கும் மந்த்ரம் உண்டு.

மஹாக்னி சயனத்தைப் பொதுவாக கருட பக்ஷி வடிவில் செய்வர். பலவித வடிவ செங்கற்களை உருவாக்கி இருநூறு கற்களுடைய அடுக்குகள் மிகவும் ஸூக்ஷ்மமான முறையில் சொல்லப்பட்டுள்ளன. முதல் முறை செய்தால் ஐந்து அடுக்குகளால் ஆயிரம் கற்களும், மீண்டும் மற்றொரு யாகத்தில் செய்தால் ஈராயிரமும் அதற்குப் பிறகு மூவாயிரமும் செய்யவேண்டும். இறுதியான கல்லை வைத்தவுடன் அங்கு ஏற்படும் அக்னியின் ஸாந்நித்யத்தை சாந்தப்படுத்தவே ஶ்ரீருத்ரம் சொல்லி ஹோமம் செய்ய வேதம் சொல்கிறது. பிறகு சமகம் சொல்லி அக்னியில் வஸோர்தாரா ஹோமம். இதை ஒட்டியே லௌகிக அக்னியிலும் ருத்ர சமக ஹோமங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ராஜஸூயம்

அரசன் மட்டுமே செய்யத்தக்கதான ஒரு யஜ்ஞம் ராஜஸூயம். இதில் ஆறு ஸோம யாகங்கள், இரண்டு பசுபந்தங்கள், பற்பல இஷ்டிகள் மற்றும் ஹோமங்கள் உள்ளன. அரசனுக்கு மிகுந்த சிறப்பைக் கொடுப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இதனை யுதிஷ்டிரர் அனுஷ்டித்து க்ருஷ்ணனுக்கு அக்ரபூஜை செய்த விவரம் மஹாபாரதத்தில் ப்ரஸித்தமே.

பவித்ரம் என்னும் அக்னிஷ்டோம ஸோம யாகம் ஒன்று செய்து, பிறகு சில இஷ்டிகள் செய்து சாதுர்மாஸ்யங்களை ஒரு வருடம் செய்து மேலும் ராக்ஷோக்னம் முதலிய இஷ்டிகளைச் செய்யவேண்டும். அடுத்து அபிஷேசனீயம் என்னும் உக்த்யம் ஒன்று. அதில் மக்களிடம் இவனே உமக்கு தலைவன் என்று கூறி பல தீர்த்தங்களிலிருந்து நீர் வருவித்து அபிஷேகம் செய்விப்பார்கள். பிறகு மேலும் சில இஷ்டிகள் தொடங்கி அதன் இடையே தசபேயம் என்ற அக்னிஷ்டோமம் செய்து இரண்டு பசுபந்தங்கள். மேலும் மீண்டும் பல இஷ்டிகள். அபிஷேசனீயத்திற்குப் பிறகு இது வரை வபநம் கூடாது. பிறகு கேசவபநீயம் என்ற அதிராத்ர ஸோமம் செய்தே வபநம். அடுத்து வ்யுஷ்டி த்விராத்ரம் என்ற அஹீன ஸோமம் மேலும் க்ஷத்ர த்ருதி என்னும் அக்னிஷ்டோம ஸோமம்.

இப்படியான மிகப்பெரிய யஜ்ஞம் ராஜஸூயம்.

அச்வமேதம்

அச்வமேதமும் அரசனுக்கே. அவனது ராஜ்யத்தில் ஏற்பட்டிருக்கும் பெரும்பாபங்களையும் போக்குவதாக மிகவும் போற்றப்படுகிறது. இந்த யாகத்தில் அவப்ருதத்தில் ஸ்நானம் செய்வதனாலேயே பெரும் தோஷங்கள் விலகும் என்கிறது சாஸ்த்ரம். இதுவும் ஒரு ஸோம யாகமே. இதில் குதிரையைப் பசுபந்தம் செய்யவேண்டும். இது கலி யுகத்தில் சாஸ்த்ரத்திலேயே தடுக்கப்பட்ட ஒன்றாகும். ஆகவே பல வித சிறப்பம்சங்களைக் கொண்ட இதனை இன்று செய்யவியலாது. முந்தைய யுகங்களில் நடந்திருக்கிறது. தசரதர் அச்வமேதம் செய்து தான் புத்ரகாமேஷ்டி செய்தார்.

இரண்டு இஷ்டிகளும் ஒரு பசுபந்தமும் செய்து யாக தீக்ஷை மேற்கொள்ளவேண்டும். குதிரையை ப்ரோக்ஷணம் செய்வித்து ஒரு வருடம் அதனை ஸஞ்சாரம் செய்ய அனுப்பவேண்டும். அதனைக் காப்பாற்ற நானூறு வில்வீரர்கள் செல்லவேண்டும். எதிரிகள் குதிரையைக் கைப்பற்றிவிட்டால் அச்வமேதம் செய்யவியலாது. இது ஒரு வருட காலம் சென்று வரும் வரையில் யாகசாலையில் பல ஹோமங்கள், இஷ்டிகள் உண்டு.

பிறகு த்ரிராத்ர அஹீன ஸோமம் ஆரம்பம். முதல் நாள் அக்னிஷ்டோம ஸம்ஸ்தை. அன்று நான்கு திக்கிலும் உள்ள பூமியை தக்ஷிணையாக அளிக்கவேண்டும். இரவு முழுதும் பலவித ஹோமங்கள். இரண்டாம் நாள் உக்த்யம். அன்று தான் குதிரையின் பசுபந்தம். யஜமானனுக்கு அபிஷேகம். மூன்றாம் நாள் அதிராத்ரம். அன்றும் வேறு பல ஹோமங்கள் செய்து அவப்ருதம் முதலிய ஸோம பூர்த்தியைச் செய்வர். பிறகு ஒரு வருடம் இரண்டு மாதம் ஒரு முறை சில பசுபந்தங்களைச் செய்தால் அச்வமேதம் பூர்த்தி.

நிறைவுரை

உலக நன்மையை முன்னிட்டு வேதம் விதித்த இந்த ச்ரௌத கர்மங்கள் மிகவும் சிக்கலானவை. இருப்பினும் மெனக்கிட்டு கற்று காக்கப்படவேண்டியவை. ஸர்வ ஜந்துக்களிடமும் கருணையே மிகுந்த நமது பூர்வீக ருஷிகள் இவற்றை ஏற்படுத்தி அனுஷ்டித்துள்ளனர் என்பதை நினைவில் கொண்டு நாமும் அவர்தம் பாதையில் செல்ல இயன்றவரை முயற்சிக்க வேண்டும்.

சுபம்.